Saturday, January 21, 2017



ஞாபகம் 

பார்வை
தூர்ந்து போனபிறகும்
வற்றவில்லை
 நினைவு நீரோடை 

இரும்பு மனிதர் 
உலோக
இச்சைகளால்
உயர்ந்த மனிதன்-
டாட்டா

எதிர்பார்ப்பு 

எனது மதுக்குவளை
அவளது நினைவுகளால்
எப்பொழுதுமே
நிரம்பி வழிகிறது
அவள்
'ச்சியர்ஸ்' சொல்வதற்காக

இப்படியுமா ?

பாய் விரித்துக்
காத்திருந்தது
ஆறு -
பயிர் தலை சாய்க்கும்வரை





ஆபத்து !!!

நீ கோபத்தில்
எரியும்போது
அதிகம் தேவைபடுகிறது
ஆக்ஸிஜன்-
மாசுபடாமல்
இருக்கத்தானே
மனித உறவுகள்?

பாதுகாப்போம் !


காற்று மாசுபட்டு
விட்டதால்
மூச்சுத்
திணறுகின்றன
மெழுகுவர்த்திகள் !



s

Friday, January 20, 2017


பருகிவிடு 

மறுபடியும் கிட்டாத
மரணம் உறிஞ்சிக்கொண்ட
ஜீவரசம் -
வாழ்க்கை

புயலோ? புரட்சியோ? 

அடுப்பெரியவில்லை
புகைந்துகொண்டு
இருக்கிறார்கள் -
ஏழைகள்
காற்று
இவர்கள் பக்கம்
வீசும் என்ற
நம்பிக்கையில்  இன்னும் -
ஊதிவிடுவோமா?

பிழைக்கத் தெரிந்தவர்களோ ?

அவசரத்தில்
அப்பன்,
ஆர்வத்தில்
குழந்தை
எவன் காலைப்
பிடிக்க ? -
நிதானத்தில் அம்மா

நம்பிக்கை

தடுக்கி விழுபவன்கூட
தலைநிமிர்வான்
முயற்சியை
முடுக்கிவிடும்போதும்,
முன்னேற
 நினைக்கும்போதும்

சிந்திப்போம் 

எலும்புக்கூட்டிற்குள்
இடப்புறமும்,
இடுப்பின்
வலப்புறமும்
காணவில்லை
பாட்டி
வெளியேறியபிறகு -
சுறுக்குப்பையை


பக்குவத்தோடு பாட்டி 

முதுகு வளைந்த
பாட்டி
முதியோர் இல்லம்
நோக்கி
முன்னேறியபோது
ஊன்றுகோலாய் இருத்த
பேரன் முனகியது  -
முதுகெலும்பு நேராகத்தானே
இருக்கிறது அப்பாவுக்கு ?








Tuesday, January 17, 2017




 தணிப்போம் 

அன்பின் அடர்த்தியைவிட
கோபத்தின் கொடூரம்
அதிகமாக இருப்பதால்
நீர்த்துப்போகின்றன
உறவுகள்



கொதிக்கவேண்டாம் ....

மரணம்
வாழ்க்கை விதியாகிறது
கோபம்
நிரந்தர
வைப்பு நிதியாகும்போது

முடிவல்ல 

சிந்திப்பதை
நிறுத்திவிட்டேன்
அவள்
சிரித்ததுமுதல் -
காதலின் முதல்
அத்தியாயம்

உழைப்போம்

வெற்றிக் கோட்டுக்கும்
வறுமைக் கோட்டுக்கும்
இடையே
ஓர் ஒற்றுமை  -
பசி

முயற்சிக்க 

இருளைப் பிடிக்கும்
முயற்சியில்
வெளிச்சத்தின்
தொடர்ந்த பயணம் -
தோற்பது
தெரிந்தும்

ஓசன்னா 

இறைவன்
சந்தேகங்களால்
ஆசீர்வதித்தார்
விஞ்ஞானிகளை -
நம்பிக்கையோடு
நன்றி கூற மாட்டார்கள்
என்று தெரிந்தும்

இக்கரைக்கு .......

இரவானத்தில் என்
ஆசைகளை
செருகிவைத்த
அம்மாவைவிட
காதலிக்காக
தொடுவானத்தை
நோக்கிய
தொடர்  ஓட்டம்
பல நேரங்களில்
தோல்வியைத்
தருவதில்லை ?

இப்படியுமா ? 

பல நேரங்களில்
வேலை வெட்டி
இல்லாதவர்கள்
செய்யும்
வெட்டி வேலை -
அரசியல்

கருணை !

ஓடுவதென்று
முடிவுசெய்த பிறகு
மலை  அருவி
வழி தேடுவதில்லை
வழிந்தோடுகிறது -
அன்பும் அப்படியே




Sunday, January 15, 2017


இழப்பதும் இன்பமே !

சூரியனைக்
காதலித்ததாலோ
என்னவோ
அடையாளம்
இழந்தது -
ஆனந்தப்பெருக்கில்
பனிப்பாறை

காது கொடு 

கனத்த
இதயத்தோடு மேகம்
அன்போடு
காற்று தழுவியதும்,
கொட்டித்தீர்த்தது
மழையாக

வகுப்பறை

நீ
ஒரு வகுப்பெடுத்தாலே
எனக்கு
கற்றலில்
மறு பிறப்பெடுத்தல்
நீ
ஆசிரியர் அல்ல
போதி(க்கும்) மரம்
உன் சுவாசத்தில்
சறுகாய்
சங்கீதத்தோடு
உதிரவே
என் வகுப்பறைத்  தவம்

கற்றுக்கொள் 

விழுந்து கிடக்கிறது
மேகம் -
தண்ணீராக.
எழுந்து ஓடுகிறது
தண்ணீர் -
மேகமாக.
நாம் !
நதிபோல நடப்போமா
விழுந்தாலும் எழுந்தாலும் ? !!!

மகிழ்ச்சியோடு போ

இலையுதிர்காலத்தில்
மட்டுமல்ல
சருகுகளின் சங்கீதம் -
மரம்
வேர் அற்று
விழும்போதும்

இன்று போய் .....

அழுக்கு வேட்டியுடன்
அப்பழுக்கு இல்லா
அப்பா
முதுகெலும்பு
இல்லாத என்னை
அசீர்வதித்து
அனுப்பினார்-
முதியோர்
இல்லத்திலிருந்து

தில்லாலங்கடியோவ்......!!!

குருவையே
சாகும்படி செய்யும்
குறுவை
சாகுபடிக்காரர்கள் -
அரசியல் வாதிகள்

கவனி  
ஆமையின்
தத்துவம் -
'வெற்றிபெற முயல்'

நடனம் 

காற்று
கிசு கிசுத்ததும்
அபிநயம் பிடித்தன
இலைகள் -
'ஆடல் கலையே
தேவன் தந்ததோ'?

கவனி? கேள் ?

அப்பா
சொல்வதைஎல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தான் (Hearing)
மகன் -
மனைவி
கவனித்துகொண்டு (Listening)
இருந்ததால்